Friday, April 5, 2013

”புதிய தலைமுறை” தொலைக்காட்சியில் நமது காந்தியடிகள் நற்பணிக் கழகம் பற்றிய செய்தி



38 ஆண்டுகளாக இலவச கல்வி வழங்கும் காந்தியடிகள் நற்பணி கழகம்




நன்றி



பதிவு செய்த நாள் - ஏப்ரல் 04, 2013, 9:07:17PM



கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பித்து வருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவர். காந்தியடிகள் நற்பணி கழகம் என்ற பெயரில் வழங்கப்படும் சிறப்பான கல்விச் சேவை குறித்த செய்தி தொகுப்பு.


குடும்பத்தின் பொருளாதார நிலையே, மாணவனின் கல்வித் தகுதியை தீர்மானிக்கும் நிலை பல காலமாகவே இருந்து வருகிறது. மாணவர்களின் படிப்பின் உயரத்தை பணம் தீர்மானிக்கக் கூடாது என்ற நோக்கில், கும்பகோணத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் தனது 3 நண்பர்களுடன் இணைந்து, காந்தியடிகள் நற்பணி மன்றம் என்ற இலவச கல்வி மையத்தை உருவாக்கியுள்ளார். கடந்த 38 ஆண்டுகளாக, தன்னார்வலர்கள் மற்றும் இங்கேயே படித்து முடித்தவர்ளைக் கொண்டு, குடந்தையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கல்வி தாகத்தை போக்கியிருக்கிறது இந்த அமைப்பு.

1975-ஆம் ஆண்டு சிறிய வாடகைக் கூடத்தில் தொடங்கப்பட்டு, பொதுமக்களின் நன்கொடை உதவியுடன் 12 வகுப்பறைகள் கட்டப்பட்டு, இங்கு கல்விச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் ஏற்கெனவே இங்கு படித்து, அரசுப் பணி உள்ளிட்ட பணிகளில் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம். தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இங்கு வகுப்புகளை நடத்துவது மிகுந்த ஆத்ம திருப்தியை அளிப்பதாக தெரிவிக்கின்றனர் இவர்கள்.



மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பதோடு இங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் ஊதியம் பெறுவதில்லை என்பது இந்த அமைப்பின் சேவைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. தங்கள் அமைப்பில் படித்தவர்கள் சமூக விழுமங்களை பின்பற்றுபவர்களாக அடிப்படைடையில் இருந்தே உருவாக்கப்படுகின்றனர் என்கின்றார் பாலசுப்ரமணியன்.

காந்தியடிகள் நற்பணிகழகத்தில் இந்தி வகுப்புகளும், போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள், பாலசுப்ரமணியன் போன்ற மனிதர்கள் அதிகரித்தால் அனைவருக்கும் இலவசக் கல்வி உண்டு என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment