Saturday, September 7, 2013

புதிய தலைமுறை கல்வி இதழில் நமது கழகம் பற்றி......


புதிய தலைமுறை கல்வி - 26-08-2013 - இதழில் நமது கழகம் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது.


http://www.puthiyathalaimurai.com/this-week/2017


கல்வி தரும் காந்தியடிகள் நற்பணிக் கழகம்!
சு.வீரமணி (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிகையாளர்)
கும்பகோணத்தில் கடந்த 36 ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது காந்தியடிகள் நற்பணிக் கழகம்
பண வசதி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரின் படிப்பு பாதியிலேயே தடைபட்டு விடக்கூடாது என்பதை தாரக மந்திரமாகக்கொண்டு செயல்படுகிறது, கும்பகோணத்தைச் சேர்ந்த காந்தியடிகள் நற்பணிக் கழகம். இந்த அமைப்பின் மூலம் 36 ஆண்டுகளாக ஏழைகளுக்கு இலவசமாக கல்விச் சேவை புரிந்து வருகிறார் பாலசுப்ரமணியன். இவர்களது சேவையைப் பாராட்டி இவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்.

“நாங்கள் ஐந்து பேர் இணைந்து பத்தாம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு, இலவசமாக பாடம் எடுப்பதற்காக, 1975-ஆம் ஆண்டு ‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். முதல் ஆண்டே நாங்கள் பயிற்றுவித்த 50 மாணவர்களும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்” என்று விவரிக்கிறார் இக்கழகத்தின் நிறுவனரான பாலசுப்ரமணியன்.

நெசவாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே விட்டு விடுவதை அறிந்து, அந்த மாணவர்களைத் தேடிப் பிடித்து காலை, மாலை நேரங்களில் அவர்களுக்கு பாடம் சொல்லித் தந்து அவர்களைப் படிக்க வைத்திருக்கிறார்கள். குடும்ப வறுமை காரணமாக சிறுவயதிலேயே கொத்தனார், பெயிண்டர் என்ற பலவிதமான வேலைகளுக்குச் சென்றவர்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். அத்துடன், மாணவர்களுக்கு ஹிந்தி வகுப்புகளையும் எடுத்து வருகிறார்கள்.

“தாராசுரம் பொன்னியம்மன் கோயில் தெரு என்னும் பகுதி சாராயம் காய்ச்சுபவர்களும், குடிகாரர்களும் நிறைந்த பகுதியாக முன்பு இருந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களின் உதவியுடன் அங்கு ஒரு காந்தி சிலையை வைத்தோம். அந்தப் பகுதி இளைஞர்களுக்கு கல்வியும், நீதிபோதனை வகுப்புகளும் எடுத்தோம். அதன் விளைவாக அந்தப் பகுதியே இன்று மாறிப்போய் உள்ளது. அந்தப் பகுதியிலிருந்து வந்து எங்களிடம் கல்வி கற்ற இளைஞர்கள் இன்று மிக உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். இன்று அந்த கிராமமே மதுப்பழக்கமற்ற பகுதியாக மாறியுள்ளது” என்கிறார் பாலசுப்ரமணியன்.

2003-ஆம் ஆண்டுவரை வாடகைக் கட்டடத்தில்தான் இக்கழகம் இயங்கி வந்தது. 2003-இல் முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து இப்போது இயங்கிவரும் கட்டடத்தை கட்டித் தந்துள்ளனர். 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றுத் தருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இவர்களின் கல்விச் சேவை, பின்னர் பிளஸ் டூ மாணவர்களுக்கும் விரிவடைந்தது. இவர்களது கழகத்தைப் பொருத்தவரை கல்விக்கு மட்டுமல்லாது நீதிபோதனை வகுப்புகள், ஒழுக்கம், நேரம் தவறாமை ஆகியவற்றையும் இணைத்தே மாணவர்களுக்கு சொல்லித் தருகிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், வங்கிப் பணியாளர் தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுகளை எழுதும் ஏழை மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள்.மேற்படிப்பு படிப்பதற்கு வசதியில்லாத மாணவர்களுக்கு ரோட்டரி கிளப் போன்ற அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் மூலமாக உதவிகளைப் பெற்றுத் தருகிறார்கள்.

“இங்கு வந்து வகுப்பெடுப்பவர்கள் அனைவருமே எங்கள் கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்கள்தான். எனவே அவர்கள் எல்லோருமே எந்தவிதப் பிரதிபலனையும் பாராமல் கல்விச் சேவை புரிகின்றனர். அதுபோல மாணவர்களிடம் இருந்து நாங்கள் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை” என்கிறார் பாலசுப்ரமணியன்.

“நான் இரண்டாம் வகுப்பு வரைதான் படித்திருந்தேன். குடும்ப வறுமை காரணமாக என் வீட்டில் என்னை தச்சு வேலைக்கு அனுப்பிவிட்டனர். கல்வி வாசமே இல்லாமல் இருந்த என்னை என் அண்ணன்தான் எனது 20-ஆவது வயதில் இந்தக் கழகத்தில் சேர்த்து விட்டார். நான் இப்போது பி.ஏ. படித்துள்ளேன். ஹிந்தி ஆசிரியராகவும் உள்ளேன். நான் குழந்தைத் தொழிலாளியாக இருந்து வேலை பார்த்த தறித் தொழிலை இன்று நானே சொந்தத் தொழிலாகச் செய்து, தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களுக்கெல்லாம் எனது துணிகளை அனுப்பும் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் இந்தக் கழகம் தந்த கல்விதான். வெறும் கல்லாக இருந்த என்னை இந்தக் கழகம்தான் சிற்பமாக மாற்றியது.” என்கிறார் சுப்ரமணியன்.
“போட்டித் தேர்வுகளுக்கு இந்தக் கழகத்தின் மூலம்தான் பயிற்சி பெற்று வெற்றி பெற்றேன். இப்போது தஞ்சாவூர், வல்லத்திலுள்ள தமிழ்நாடு குடும்ப நலத் துறையில் அலுவலராகப்  பணிபுரிகிறேன். இங்கு படிக்கும் 10 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு கணித வகுப்புகளை எடுத்து வருகிறேன். மற்ற வேலைகள்  எப்படியிருந்தபோதும் ஏழைகளுக்கு கல்வி அளிக்கும் ஆத்மதிருப்தி வேறு எந்த வேலையிலும் கிடைக்காது.’ என்கிறார் செல்வம்.
 
“நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்தக் கழகத்தில்தான் ஹிந்தி மற்றும் ஆளுமை பயிற்சிகளைப் பெற்றேன். இப்போது நான் ஒரு தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக உள்ளேன். தினமும் இங்கு வந்து 10 மற்றும் பிளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப் பாட வகுப்புகளை எடுத்து வருகிறேன்.” என்கிறார் தனராமன்.

இந்த அமைப்பைத் தொடங்கும் போது பாலசுப்பிரமணியனுடன் இருந்த நண்பர்கள் அனைவரும் அவரவர் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றுவிட, இவர் மட்டும் விடாமல் தொடர்ந்து காந்தியடிகள் நற்பணிக் கழகத்தை நடத்தி வருகிறார். வாழ்க்கையை நடத்த மளிகைக் கடை நடத்தி வரும் இவர், படித்தது எட்டாம் வகுப்பு வரைதான். ஆனால் விடா முயற்சி காரணமாக இரண்டு எம்ஏ பட்டங்களைப் பெற்றுள்ளார்.

8ஆவது, 10ஆவது மாணவ- மாணவியரின் விடையாற்று விழா

8ஆவது, 10ஆவது மாணவ- மாணவியரின் விடையாற்று விழா
                        01  - 09 - 2013 ,ஞாயிறு


ப்ரவீண் - ஆகஸ்டு 2013ஆம் பருவ மாணவர்கள் விடையாற்று விழா

ப்ரவீண் - ஆகஸ்டு 2013ஆம் பருவ மாணவர்கள் விடையாற்று விழா
                    25 -08-  2013 , ஞாயிறு