Friday, July 8, 2011

காந்தியடிகள் நற்பணிக் கழகம் in "www.thesundayindian.com"

www.thesundayindian.com/ta/story/கண்ணைத்-திறக்கும்-கல்விக்கூடம்/13/664/

கண்ணைத் திறக்கும் கல்விக்கூடம்


சுந்தரபுத்தன்
ஜூன் 30, 2011 11:34

கும்பகோணம் கும்பேஸ்வரன் தெருவுக்குப் பின்னே இருக்கிறது காலசந்தி கட்டளைத் தெரு. அதற்கு என்ன முக்கியத்துவம்? அங்குதான் பள்ளியை பாதியில் விட்டவர்கள், மழைக்குக்ல்கூட பள்ளியில் ஒதுங்காதவர்களுக்கான காந்தி நற்பணிக்கழக இலவசப் பள்ளி இருக்கிறது. எல்லோரும் வேலைகள் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் பள்ளி தொடங்குகிறது. தினமும் அப்படித்தான்.

"என்னோட கிராமம் செம்பியன்மாதவி. சிறுவயதிலேயே கும்பகோணத்துக்கு வந்துவிட்டேன். குடும்பச் சூழல் காரணமாக படிக்க முடியவில்லை. அப்பாவின் மளிகைக் கடையில் வேலை பார்த்தேன். ஆனால் படிப்புமீதான ஆசை மட்டும் குறையாமல் இருந்தது. வேலை பார்த்துக்கொண்டே பொலிடிக்கல் சயன்ஸில் பி.ஏ. படித்தேன். பிறகு இந்தியில் எம்.ஏ., படித்துமுடித்தேன். அந்த நேரத்தில்தான் நம்மை மாதிரி படிக்காத ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என்னை மாதிரி சில நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கியதுதான் காந்தியடிகள் நற்பணிக் கழகம்" என்று சொல்லத் தொடங்குகிறார் ஒரு மாலை நேர வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த கு. பாலசுப்ரமணியன். அவர்தான் பள்ளியின் நிறுவனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய அறையில் முளைத்த கனவு அது.

காந்திய கொள்கைகளில் ஈடுபாடுள்ள அவர், ஒரு படிப்பகத்தில் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து மாலை நேர இலவச வகுப்புகளை நடத்தினார். எஸ்எஸ்எல்சியில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் படிக்க டுடோரியலில் அதிகமாக பணம் கேட்பார்கள். அதோடு ஒரு பாடத்தில் தோல்வி என்றால் எல்லா பாடங்களையும் எழுதவேண்டிய நிலையும் இருந்தது. அந்த காலகட்டத்தில் ஓர் அமுதசுரபி போல கு.பாலசுப்ரமணியனின் காந்தி நற்பணிக் கழகம் செயல்படத் தொடங்கியுள்ளது. "ஆரம்பத்தில் மாதாகோயில் தெருவில் முதியோர் கல்வி வகுப்புகளை நடத்தினேன். மக்களின் ஒத்துழைப்பு இ¢¢லை. பிறகுதான் பள்ளி மாணவர்களுக்கு இலவச இந்தி வகுப்புகளை நடத்தினோம். நல்ல வரவேற்பு. அதுதான் இன்று ஒரு பள்ளியாகவே உருவெடுத்திருக்கிறது. மாலையில் 6 மணிக்கு ஆரம்பித்து 10 மணிவரை வகுப்புகள் நடக்கும். காலையில் வகுப்புகள் உண்டு" என்கிறார்.ஜெயப்பிரகாஷ் நாராயணின் பீகார் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட அவர், மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கும்போது காந்திய சிந்தனைகளை சொல்லாமல் இருப்பதில்லை. வாழ்வில் எளிமையும் சேவை மனமும் ஊழலற்ற மனநிலையும்தான் முக்கிய கல்வியாக இருக்கமுடியும் என¢று நம்புகிறார். இவர்களது பணியைப் பார்த்த பனாரஸ் மஹால் ஜவுளிக்கடை அதிபர் தாமாக முன்வந்து வகுப்பு நடத்துவதற்கான அறைக்கு வாடகைப் பணம் கொடுத்து உதவியுள்ளார். இப்படி படிப்படியாக நடந்த இலவச வகுப்புகள் பற்றிய செய்தி நகரெங்கும் பரவ கோயில் நகரில் காந்தி நற்பணிக் கழகமும் நகரின் பெருமையாக மாறியிருக்கிறது. ஒரு பெரும் பொருளாதாரப் போராட்டத்துக்குப் பிறகு தற்போது சொந்த கட்டடத்தில் இயங்குகிறது.

இங்கு நேரடியாக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்வெழுத படிப்பவர்கள் அதிகம். நெசவாளர் குடும்பங்களில் 'சீடா' போடும் பணிக்காக குழந்தைகளைப் பயன்படுத்துவது பழக்கம். அதனால் படிப்பு பாதியில் நிறுத்தப்படும் அல்லது பள்ளிக்கே அனுப்பமாட்டார்கள். மற்றும் சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்படும் ஏழைக் குழந்தைகள். இவர்கள்தான் இப்பள்ளியின் இலவச வகுப்புகளின் மாணவர்கள். இந்த மாணவர்களின ஆர்வத்தை சொல்லிமாளாது என்கிறார் அங்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் ஐயப்பன். ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் இவரைப் போன்ற பலரும் மாலை நேரம் வகுப்புகளை ஊதியமில்லாமல் நடத்துகிறார்கள். "நாங்களும் இங்கதான் இந்தி படிச்சோம். நம்முடைய பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்று நினைத்தோம். இருபது ஆண்டுகளாக வகுப்புகளை நடத்திவருகிறோம். எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. எங்களுக்கு ஆத்மதிருப்தி கிடைக்கிறது. அதுவே போதும்" என்று சொல்கிறார் பாலவெங்கட மாணிக்கம், ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிகிறார்.

இந்தப் பள்ளியில் 300 மாணவ மாணவிகள் இந்தி வகுப்பில் படிக்கிறார்கள். இளம் மனங்களில் காந்திய சிந்தனையைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார் கு.பாலசுப்ரமணியன். தாங்கள் பணிநேரம் போக ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் தன்னிச்சையாக வந்து ஊதியம் பெறாமல் வகுப்பு நடத்துகிறார்கள். தேறமாட்டான் என்ற பெயரெடுத்த இளைஞர் சுப்ரமணி. காந்தியடிகள் நற்பணிக் கழகம்தான் தன்னை ஒரு மனிதனாக உயர்த்தியது என்று பெருமிதத்துடன் தசஇயிடம் அவர் பகிர்ந்துகொண்டார். "அஆவன்னாகூட தெரியாதவனா இருந்தான். அவங்கதான் என்னை கண்ணைத் திறந்தாங்க. நேரடியாக எட்டாம் வகுப்பை முடிச்சுட்டு இந்தியில பிஏவரைக்கும் படிச்சேன். இன்னைக்கு நான் எங்க ஜவுளிக்கடையில் கணக்கு எழுதறவனா இருக்கேன். இ¢ல்லைனா துணிக்கு சாயாம் போட்டுக்கிட்டு இருந்திருப்பேன்" என்கிறார்.காந்தியடிகள் நற்பணிக் கழகத்தில் படித்து இன்று நல்ல வேலையில் இருக்கும் பலரும் உதவி செய்கிறார்கள். புதிய கட்டடம் கட்டுவதற்காக ஒரு மாணவர் தனிப்பட்ட முறையில் 9 ஆயிரம் ரூபாய் அனுப்பியதை பெருமையுடன் சொல்கிறார்கள். ஒரு இனிப்புக் கடையில் வேலைபார்த்த வெங்கட்ராகவன் பகுதி நேரத்தில் இப்பள்ளியில் படித்து நேரடியாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். பிறகு பத்தாம் வகுப்பில் 429 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். பள்ளியில் சேர்ந்து பனிரெண்டாம் வகுப்பில் படித்து தேறியிருக்கிறார். "நான் படிக்கிறேன் என்பது கனவு போல இருக்கிறது. இந்த நற்பணிக் கழகத்தால் கிடைத்த பரிசு அது. பிஏ சமூகவியல் படிக்கலாம் என்றிருக்கிறேன். வீட்டிலும் ஆதரவு காட்டுகிறார்கள். எனக்கு ஐஏஎஸ் ஆகவேணடும் என்பதுதான் ஒரே இலட்சியமாக இருக்கிறது" என்கிறார் வெங்கட்ராகவன்.கும்பகோணத்தைச் சேர்ந்த கலை விமர்சகர் தேனுகா, ''குறைந்தபட்ச நிதி ஆதாரம்கூட இல்லாமல் இயங்கும் இப்பள்ளி ஓர் அதிசயம். எங்கள் ஊருக்கே பெருமை சேர்க்கும் அடையாளமாக மாறியிருக்கிறது'' என்கிறார். மற்றப் பள்ளிகளைப் போல அல்ல. இங்கு படித்தவர்கள் வேலைக்குச் சென்ற பின்பும்கூட மாலை வகுப்புகளை நடத்த ஆர்வத்துடன் வருகிறார்கள். நன்றிக்கடன்.

Sunday, July 3, 2011

கழக கட்டடத்தின் முதல் தளம் - திறப்பு விழா
காந்தியடிகள் நற்பணிக் கழக கட்டடத்தின் முதல்  தளம் 
 11.06.2011 அன்று  திறக்கப்பட்டது

.